இலங்கையின் ஏற்றுமதியை 36 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு
2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் திறமையான தொழிலாளர் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களை மறுஆய்வு செய்வதும், எதிர்கால முன்னுரிமைகள் குறித்து ஆராய்வதும் இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.
வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சர்வதேச சந்தைகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
சந்தை விரிவாக்கம், ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் அளவிடக்கூடிய பெறுபேறுகளை அடைய அதிகாரிகள் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்தும் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கேற்ப தங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.