இலங்கையின் 23 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவில்!
இலங்கையின் 23 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவில் ஜூன் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வார பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜெய்ப்பூர் மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனம் போன்ற முதன்மையான பொலிஸ் பயிற்சி நிறுவனங்களில் இலங்கை பொலிஸாருக்கு ஏற்ப திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, இளைய, நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது, குற்றங்கள், முகாமைத்துவம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையக் குற்ற விசாரணை, மற்றும் முக்கியஸ்தர் பாதுகாப்பு பயிற்சி போன்ற பல்வேறு பாடங்களில் உயர்தர பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய - இலங்கை தொழில்நுட்ப மற்றும் பொருளதார திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 130க்கும் மேற்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.