இலங்கைக்கு கிடைத்த பாராட்டு ; அரசாங்கத்திற்கு காத்திருக்கும் ஒத்துழைப்பு
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (03) நிதி அமைச்சில் நடைபெற்றது.

டிஜிட்டல் மயமாக்கல்
இவ்வுயர்மட்ட சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா மற்றும் அதன் பொருளாதார நிபுணர் கலாநிதி வகீஷா குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கன்னி விக்னராஜா அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்திலும் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து செயற்படவுள்ளோம். நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்துடன் எவ்வித விவாதமும் இல்லை.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றார்.
இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கைக்காக வழங்கி வரும் ஆதரவை மதிப்பதாகவும் நிதி ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்கு அப்பாற்பட்ட தொடர்பின் அவசியத்தையும் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதன்போது வலியுறுத்தினார்.