ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்யுங்கள்! மஹிந்த
வன்முறை சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்வதில் காண்பிக்கும் ஆர்வத்தினை, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்வர்களை கைது செய்வதிலும் காண்பிக்குமாறு சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதற்கு நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த கடிதத்தினை தற்போது அரசாங்கத்தின் ஒரேயொரு முதன்மையான அதிகாரியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு குறித்த கடிதத்தின் ஊடாக மேற்குறிப்பிட்ட நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஏனைய அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் குரலெழுப்பிய பலரும், இன்று வெ வ்வேறு காரணிகளுக்காக ருவன் விஜேவர்தனவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தைப் போன்றதொரு நடவடிக்கையை கூட முன்னெடுப்பதற்கு தயக்கம் காண்பிப்பதாக தெரிகிறது.
வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை இனங்காண்பதிலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் காட்டும் ஆர்வத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையிலும் காண்பிக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு இது தொடர்பில் குரலெழுப்புமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , சுயாதீனமான செயற்படும் பொதுஜன பெரமுன குழு, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உருமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி , மக்கள் கட்சி உள்ளிட்ட சகல தரப்பினரையும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு விசேடமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.