ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பது தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்!
"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் திறமைமிக்கவர்கள் பலர் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், மாற்றுக்கட்சி வேட்பாளரை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்.? தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை Ranil Wickremesinghe எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது தொடர்பில் எமது கட்சி தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை."
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால், நாம் அவசரப்படாமல் பொறுமையாக இருக்கின்றோம். ஏனெனில் தேர்தலை எதிர்கொள்ள அச்சமில்லாத ஒரேயொரு கட்சி மொட்டுவே. எதிர்க்கட்சிகளுக்குள்தான் வேட்பாளர்கள் தொடர்பில் போட்டி நிலவுகின்றது.
எமது கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. சில ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் போல் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்ப முயல்கின்றன. மக்களுக்கு எல்லாம் விளங்கும்.
ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். அவர் எமது கட்சியின் உறுப்பினர் அல்லர். ஆனால், எமது கட்சியின் ஆதரவுடன்தான் அவர் ஜனாதிபதிப் பதவியில் உள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளிவந்தவுடன் தேர்தல் தொடர்பில் எமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.