கோட்டாபயவை பாதுகாக்க பிரதமர் ரணிலின் அரசியல் தந்திரம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக (Gotabaya Rajapaksa) அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான யோசனைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வைப்பதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேரடியாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய வழிமுறைகைள கையாண்டு வருவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
அரச தலைவரின் அதிகாரங்களை அதிகரித்த 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் அரச தலைவருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதற்கு பதிலாக வேறு வகையான யோசனைகளை கொண்டு வந்து, அரசியல் பொறியை வைத்து வருவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெனமூர் அரசியலமைப்புச் சட்டம்
டெனமூர் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த தெரிவுக்குழு முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த மே 29 ஆம் திகதி விசேட உரை ஒன்றை நிகழ்த்தியபோது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனமூர் அரசியலமைப்புச் சட்டம் 1931 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் கொண்டு வரப்பட்ட சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் அது 1977 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
பின்னர் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இப்படியான சூழ்நிலையில், மீண்டும் டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவாக 10 தெரிவுக்குழுக்களை நியமிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, போத்துகேயர் இலங்கையை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை உற்சவமாக கொண்டாட திட்டமிட்டார்.
தற்போது அதே விதத்தில் ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் இருந்த துதிபாடும் முறையை கூறி சமூகத்தை தவறான வழிநடத்த பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறார் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காகவே அவர் டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் கொண்டு வருவது தொடர்பிலான யோசனைகளை முன்வைப்பதாகவும் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் மூலம் அவர் அரசியல் ரீதியான தந்திரம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.