நாடாளுமன்றத்திற்கு நாம் கதிரைகளுக்காக வரவில்லை! இ.ரா சாணக்கியன்
மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (17-05-2022) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் சபைத்தலைவர் தினேஷ் குணவர்த்தனவிற்கு (Dinesh Gunawardena) இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன.
இன்றைய நாடாளுமன்ற அமர்விற்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக இரா. சாணக்கியனை அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன அதனை தடுத்தார்.
சபைக்கு தலைமை தாங்குமாறு படைக்கள சேவிதர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய இரா. சாணக்கியன் தயாராக இருந்தபோதும், தினேஸ் குணவர்த்தன, சபாநாயகருக்கு அனுப்பிய சில தகவல்களின் அடிப்படையில் இரா.சாணக்கியனுக்கு பதிலாக மற்றும் ஒருவர் சபைக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இது நாடாளுமன்ற உறுப்பினரான தனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என இரா. சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
இதன்போது இரா. சாணக்கியனும், சுமந்திரனும் தினேஸ் குணவர்த்தனவுடன் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தனர்.
“நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம். ஆனால் இவ்விடயமானது ஜனநாயகத்தை மீறும் ஒரு செயல்பாடாகும். நாடாளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.
ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) (டீல்) வர்த்தகம் தொடர்பான விவாதத்தின்போது, நான் சபைக்கு தலைமை தாங்குவதை தினேஸ் குணவர்த்தன விரும்பவில்லை.“ என இரா. சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.