நாடாளுமன்ற முற்றத்தில் உருவாகுமா திருடர்கள் கோ கம?
இன்றைய தினம் (04-05-2022) நாடாளுமன்ற நுழைவு வழியான பொல்கஸ்தூவ சந்தியில் ஆர்ப்பாட்டம் செய்தோரில் 13 பேரை பொலிஸார் கைது செய்தனர். அதில் இருவர் பெண்கள்.
ஆர்ப்பாட்டம் நடந்த அந்த பகுதி தலங்கம பொலிஸ் பகுதியாகும். ஆனால் அங்கே வந்து அவர்களை கைது செய்வது நவகமுவ பொலிஸ். இது தவறான ஒரு அணுகுமுறை.
இந்த இரண்டு பொலிஸுக்கும் கூட கைதானோரை கொண்டு செல்லாது மகரகம பொலிஸுக்கு இந்த சிவில் உறுப்பினர்களை பொலிஸார் கொண்டு செல்கிறார்கள். அதுவும் தவறு.
அதன்பின் அவர்களை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்திய போது 50க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் , அவர்களுக்காக வாதாட நீதிமன்றத்தில் குழுமினர். அதேபோல அப்பகுதி மக்களும் பெரும் திரளாக நீதிமன்ற வளளாகத்தில் காணப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த செயலே தவறு. அடுத்து அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. கையில் ஒரு தடி கூட வைத்திருக்கவில்லை. நாடாளுமன்றத்துக்கு போவோரை தடுபப்பதாகவே கைது செய்கிறார்கள்.
அப்படியானால் யாராவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸிலோ அல்லது சபாநாயகர் வழியாகவோ பொலிஸில் புகார் அளித்திருக்க வேண்டும். இப்படி எதுவும் இல்லாத நிலையில் எப்படி கைது செய்ய முடியும்?
எனவே கைதானோர் பிணையில் விடுதலையாகினர்.
இன்றைய பிரச்சனை மக்களது பிரச்சனை. எனவே இன்றைய பலம் மக்கள் கையில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அரசோ அல்லது போலீசோ அல்லது படைகளோ வந்து மக்களை இனி அடக்க முடியாது.
கைது நடக்கும்வரை குறைந்த சிலரே போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் கைதின் பின் பெரும் திரளாக நாலா புறமும் இருந்து மக்கள் அவ்விடத்தை முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர்.
காலிமுகத்திடலில் கோட்டா கோ கம - அலரி மாளிகை முன் மைனா கோ கம - இனி நாடாளுமன்ற முற்றத்தில் திருடர்கள் கோ கம உருவானால் வியப்பதற்கு ஒன்றுமில்லை. என அரசியல் அவதானி ஜுவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
என்னதான் தடை அதிகரித்தாலும் மக்களது கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் அதிகரிப்பது குறையாமல் அதிகரித்தவண்ணமே உள்ளது.
