ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட நிலையே இலங்கையிலும் ஏற்படும் அபாயம்!
நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டு, ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (06-01-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் (S M Marikkar) கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்கு அவர் வெளியிட்ட கருத்துகள்,
மக்களுக்கு இம்முறை வழங்குவதற்கு ஒன்றுமில்லை, மாறாக மக்களிடமிருந்தே எதையாவது பெறவேண்டும் என வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) கருத்து வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், பாதீடு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம்கூட கடக்காத நிலையில் 229 பில்லியன் ரூபாவுக்கு நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுவது சிறப்பான விடயம் என சிலர் கருதலாம்.
ஆனால் நிவாரணம் வழங்குவதற்கான வருமான வழிமுறை என்னவென்று கேள்வி எழுப்பினால் அதற்கான உரிய பதில் நிதி அமைச்சரிடம் இல்லை.
வருமான வழிமுறைகள் இன்றி, செலவீனங்கள் அதிகரிக்கப்படுமானால், பணத்தை அச்சிட்டு அதனை வழங்கவேண்டிய நிலைமை மத்திய வங்கிக்கு ஏற்படும்.
மத்திய வங்கி பணம் அச்சிட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சரியா, வருமானம் இன்றி, பணத்தை அச்சிட்டு நிவாரணம் வழங்கினால் பணவீக்கம்தான் அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்தால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
எனவே, பொருட்களை வாங்குவதற்கு 5 ஆயிரம் ரூபா போதுமானதாக இருக்காது. எனவே, எதிர்காலத்தில் ஆபிரிக்க நாடுகளில்போல பொருட்களை வாங்க, ‘வில்பரோக்களில்தான்’ பணம் கொண்டுசெல்ல வேண்டிவரும்.
பணவீக்கம் அதிகரிக்காது, பணம் அச்சிடப்படாது என்றால், வருமான வழிமுறைகள் என்னவென்பதை நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும்.
அதேவேளை, பணவீக்கம் வந்தாலும் பரவாயில்லை, நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைத்து, ஏப்ரலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலா 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுகின்றது. பணம் அச்சிடப்படுவதால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
எனவே, ஐந்தாயிரும் ரூபா கிடைக்காதவர்களுக்கான தீர்வு என்ன? ஏப்ரலில் பஞ்சம் வரும். மருந்து பொருட்களுக்குகூட தட்டுப்பாடு ஏற்படும். அமைச்சரவையை மாற்றுவதால் இப்பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்றார்.