இலங்கையில் அச்சிடப்படும் பணத்தாள்கள் எங்கே போகிறது?
இலங்கையின் அரச வங்கிகளில் அதிக அளவு பணம் எடுக்க வேண்டுமெனில் நீங்கள் சில மணிநேரங்கள் காத்திருக்கவேண்டும். வங்கிகளில் பணத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆனால் அரசாங்கமோ தினமும் நாணயத்தாள்களை அச்சிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியாயின் அச்சிடப்படும் பணத்தாள்கள் எங்கே போகிறது? என முகநூலில் சுப்பிரமணியா பிரயா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டது,
இலங்கையில் இப்போது சட்டரீதியான வியாபாரத்தை விட சட்டவிரோத வியாபாரமே அதிகம் நடைபெறுகிறது.
அதனால் பணம் தனிநபர்களினால் பதுக்கப்படுகிறது. உண்டியல் மூலம் கொடுக்கல் வாங்கல்களை செய்யும் போது வெளிநாட்டு பணத்திற்கு அதிக பெறுமதியை இடைத்தரகர்கள் வழங்குகின்றனர்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு வங்கிகள் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை சடுதியாக குறைந்துள்ளது.
உண்மையில் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைக்கு காரணம் சட்டவிரோத பணப்பதுக்கல்காரர்களும், பிஸ்னஸ் மாபியாக்களும் தான்.
அவர்கள் யாரென இந்த அரசாங்கத்திற்கு தெரியும். அமைச்சர்களினதும் அரசியல்வாதிகளினதும் முகவர்களும், பினாமிகளும், அரசோடு ஒட்டி உறவாடுபவர்களுமே இந்த மாபியாக்கள்.
அவர்களே இந்த கொடுங்கோல் ஆட்சியை கோடிகளை செலவளித்து கொண்டுவந்தவர்கள். உண்மையில் மகிந்த + கோத்தபாய அரசுக்கு வாக்களித்த மக்கள் பாவப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாமாக வாக்களிக்கவில்லை வாக்களிக்க வைக்கப்பட்டனர்.
அதற்காக செலவளித்த தொகையினையே இன்று பொருட்களின் விலையேற்றங்களாலும், தமக்கேற்ற அமைச்சரவை அறிவிப்புக்கள் ஊடாகவும் ஒன்றுக்கு நூறாக இன்று மக்களிடம் இருந்து பறித்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிக அதிகரித்துள்ளது. நாட்டில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள நடுத்தர வர்க்கம் சுரண்டப்பட்டு அடித்தட்ட வர்க்கமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கருப்புப்பணங்களின் சந்தையாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது. சடுதியாக அதிகரித்து செல்லும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு சிறிய அறிவிப்பு விடுத்தால் போதும்.
ஆயினும் அதை அவர்கள் செய்யப்போவதில்லை. அச்சடிக்கப்பட்டு புளக்கத்தில் உள்ள 5000 ரூபா நாணயத்தாள்கள் அனைத்தும் செல்லுபடி ஆகாதென்று ஒற்றை அறிவிப்பு விடுத்து அவற்றை வங்கிகளில் வைப்பு செய்து மீளப்பெற கால அவகாசம் வழங்கினால் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
இந்தியாவில் மோடி அரசாங்கம் பதவியேற்றவுடன் செய்த பணத்தாள் மதிப்பிழப்பு செயற்பாட்டை இங்கு இப்போது செய்யவேண்டும் ஆயினும் தங்கள் சகாக்களுக்கு பாதிப்பு ஏற்பட ராஜபக்ச சகோதரர்கள் விடமாட்டார்கள். அவர்களை வாழ வைக்கும் தெய்வங்களே இந்த மாஃபியாக்கள்தான்.
ஒரு கொள்ளையர் கூட்டம் ஆட்சியில் அமர்ந்தால் எவ்வாறு நடந்துகொள்வார்களோ அவ்வாறுதான் இன்றைய அரசாங்கம் நடந்துகொள்கிறது. இப்போது அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அவர்கள் சுயமாக எடுக்கும் முடிவுகள் இல்லை.
பின்னாலிருக்கும் கொள்ளையர்களின் முடிவுகளை இவர்கள் செயற்படுத்துகிறார்கள் அவ்வளவே.புதிய ஆட்சிமாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு 5000 ரூபா நாணயத்தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் உயரிய வளர்ச்சியை எட்டும்.
பதிக்கி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பணம் வெறும் காகிதமாக மாறும் சட்டவிரோத பணப்பதுக்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழிலை கைவிடுவார்கள். வங்கிகளில் தாராள பணப்புழக்கம் இருக்கும் நாடு இயல்பு நிலைக்கு மாறும்.
அது நடைபெறாமல் எத்தனை பில்லியன் டொலர் கடன் வாங்கியும் எதுவும் ஆகப்போவதில்லை. நாட்டுமக்கள் தொடர்ந்தும் தெருவில்தான் நிற்கவேண்டும்