காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே? ஒன்ராறியோ மாகாணசபை கதவைத் தட்டும் தமிழர்கள்!
இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ட் 30 திகதி செவ்வாயன்று இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.
ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாண மன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட வேற்று இனத்தவர்கள் இந்த ஒளிப்படகாட்சிப்படுத்தலை பார்த்தும், கேட்டும் அறிந்து கொண்டதுடன், தமது சமூக வலைத்தளங்களில் இதனை நேரடியாக பகிர்ந்து கொண்டமை நீதிக்கான போராட்டத்துக்கு நம்பிக்கையினை தந்திருந்தது என நிகழ்வு ஒருங்கிணைப்பாளான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு.மகா ஜெயம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு, பொறுப்புக்கூற வைப்பத்தற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
மேலும், நிகழ்வு நாளில் கொட்டிய கடுமை மழையானது, நீதிகோரி 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராடும் தாய்மார்கள், உறவுகளின் கண்ணீரை நினைவுபடுத்தியதாக அமைந்ததென உணர்வுகளை பகிர்த்தனர்.