ஈரானின் எரிபொருள் உதவியைப் பெறுவதில் இலங்கைக்குச் சிக்கல்
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாக ஈரான் விடுத்த அழைப்பிற்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளதுடன், அதனைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளது.
இலங்கையிடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், மசகு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கையிலுள்ள ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh), தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ,நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்த கேள்விக்கு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பின்வருமாறு பதிலளித்தார்.
ஈரானின் இந்தத் தாராளமான முன்மொழிவை இலங்கை அரசாங்கம் பெரிதும் மதிக்கிறது. சொந்தமாகச் சரக்குக் கப்பல்களைக் கொண்ட நாடுகளே இவ்வாறான வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
துரதிஷ்டவசமாக, ஈரானில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான வசதிகளோ அல்லது சொந்தமான கப்பல்களோ தற்போது இலங்கையிடம் இல்லை.
ஈரானின் சலுகையைப் பயன்படுத்துவதில் உள்ள தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ரீதியான இயலாமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.