இலங்கையின் இன்றைய அவல நிலை! சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் எதிர்கால சந்ததியினரின் வாழ்வும் திசைமாறிப்போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தடையின்றி தொடர முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
மேலும், கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடரும் மின்தடை பாடசாலை போக்குவரத்து செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகி வருகின்றது.
இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலே இரவு பகலாக காத்திருக்கும் அவல நிலையும் இதனால் தமது பிள்ளைகளை உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறாக முச்சக்கர வண்டியில் பாடசாலை செல்லும் தனது பிள்ளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் தந்தையும் அதேவேளை அவரது பிள்ளை முச்சக்கர வண்டிக்குள் இருந்து கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.