சிரித்துக்கொண்டு மனித படுகொலை செய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் மீது எவ்விதமான அக்கறையும் இல்லையெனவும், அவரால் மாத்திரமே சிரித்துக்கொண்டே மனித படுகொலை செய்ய முடியுமெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு மக்கள் இன்று ஒருவேளை உணவின்றி பட்டினியால் வாடி வருகின்றனர். ஆனால் இந்த அரசுக்கு அதைப்பற்றி கவலையில்லை. வீதியில் போராட்டத்திற்கு வரும்போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பட்டினியால் ஏற்பட்டுள்ள வேதனையே இன்று இவ்வாறு மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. மக்களின் போராட்டம் சாதாரணமானது, அவர்களது கோபமும் நியாயமானது.
நாளை பிரச்சினை தீருமா, அல்லது நாளை மறுதினம் தீருமா என்று மக்கள் தினமும் சிந்தித்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே தயவு செய்து மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை உடனடியாக நிறுத்துங்கள்.
துப்பாக்கி ஊடாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என அனைத்து பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அனுரகுமார திசாநாயக்க எம்.பி இதன்போது மேலும் தெரிவித்தார்.