இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
மின்சாரத்துறையின் பல அரச அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (10-02-2023) நிராகரித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி நிறைவடையவுள்ள பரீட்சையின் போது க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான தீர்விற்கு இணங்கத் தவறியதற்காக நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.
மின்சாரத் துறையின் பங்குதாரர்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, பரீட்சையின் போது தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் தடையற்ற மின்சாரத்தை வழங்க முடியாது எனக் கூறி, இலங்கை மின்சார சபை அதன் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளைத் தொடர்ந்த நிலையிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது.