இலங்கையில் தொடரும் கொடூர சம்பவங்கள்: இன்றும் ஒருவர் உயிரிழப்பு
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் 37 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேக நபர் கத்தியால் குத்திய சம்பவம் பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பின்னர், பிடிகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு உதவுவதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சந்தேக நபர் பொலிஸ் குழுவினரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டதுடன், கைக்குண்டு போன்ற பொருளை பொலிஸ் அணி மீது வீச முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காகவும், மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும், சந்தேக நபர் மீது காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சந்தேக நபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.