இ.போ.சபை பஸ்களின் சேவைகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
நாட்டில் நாளை முதல் (28-06-2022) இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமைப்போன்று சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் இ.போ.சபை பஸ்களின் சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த எதிர்பார்க்கும் புதிய பேருந்துக்கட்டண அதிகரிப்பு தொடர்பான கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய பேருந்துக்கட்டண அதிகரிப்பு தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் (Bandula Gunawardene) நாளை பிற்பகல் கலந்துரையாடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்துள்ளார்.
இதன்படி, அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு அமைய புதிய பேருந்து கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு பேருந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.