இலங்கையில் பாண் வாங்குவோரின் கவனத்திற்கு ; சுற்றிவளைப்புகள் தீவிரம்
நிர்ணயிக்கப்பட்ட எடையற்ற பாண்களை விற்பனை செய்தல் மற்றும் விலையைச் சரியாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகளும் சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 29 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது 107 கடைகளும், பேக்கரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பாண் விற்பனை
இதன்போது, குறைந்த எடைகொண்ட பாண் விற்பனை தொடர்பாக 35 சம்பவங்களும், அதன் எடையைக் காட்சிப்படுத்தாமை தொடர்பாக 85 இடங்களும், விலையைக் காட்சிப்படுத்தாத 55 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்தச் சோதனைகளின் போது 71 பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. குறைந்த எடைகொண்ட பாண் கண்டறியப்பட்ட சந்தர்ப்பங்களில், சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமன்றி, அதனை உற்பத்தி செய்த பேக்கரி வரையிலும் விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்போது பேக்கரியிலுள்ள பாணின் எடையும் பரிசோதிக்கப்பட்டு, குற்றம் உறுதிசெய்யப்படுமாயின் உற்பத்திச் செயல்முறையை உடனடியாகச் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், போதுமான சான்றுகள் உள்ள பட்சத்தில் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் செப்டம்பர் 01 முதல் 03 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 118 கடைகளும் பேக்கரிகளும் பரிசோதிக்கப்பட்டு, குறைந்த எடைகொண்ட பாண் தொடர்பான 54 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.
இதற்கமைய, இந்த இரு திட்டங்களின் கீழும் ஒட்டுமொத்தமாக 225 கடைகளும் பேக்கரிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த எடைகொண்ட பாண் தொடர்பான 89 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.