இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்ட 24 இணையத்தளங்கள்
அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்குத் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழுள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையினால், 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்
சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் இலங்கைக்குள் இணையவழி சூதாட்டச் சேவைகளை நடத்துவதும் அதனைப் பரப்புவதும் அச்சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் குற்றமும் சட்டவிரோதமான செயலுமாகும்.
அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையத்தளங்களை இலங்கைக்குள் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்காகத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்துத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அந்த இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.