மலையக தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வேண்டும்!
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மலையக - தாயகம் திரும்பியோருக்கான இயக்கம் சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் மலையக - தாயகம் திரும்பியோருக்கான இயக்கத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது பேசிய அந்த ஒருங்கிணைப்பாளர் கந்தையா கூறுகையில்,
1980 களில் இலங்கையில் நடைபெற்ற கலவரத்தின்போது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த மலையகத் தமிழர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை குடியுரிமையும் இல்லாமல், இந்தியக் குடியுரிமையும் இல்லாமல், நாடற்றவர்களாக தவிக்கும் நிலை இருந்து வருகிறது.
எனவே அவர்களுக்கு இந்தியா இலங்கை சர்வதேச ஒப்பந்தமான சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின்படி, 30 ஆயிரம் பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்க தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய குடியுரிமை பெற்று தர நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கின்றோம்.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் அனைவருக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல இந்திய குடியுரிமை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.