பிரித்தானியா செய்தியாளர் ஆகாஷ் ஹசனுக்கு இலங்கை விமானத்தில் ஏறத் தடை
பிரித்தானியா செய்தியாளர் ஆகாஷ் ஹசனுக்கு இலங்கைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 196 இல் ஏறுவதற்கே இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உருவாகி வரும் நெருக்கடிகள் குறித்து செய்திகளை சேகரிப்பதற்காகவே இலங்கை செல்வதாக ஹசன் ட்வீட் செய்துள்ளார்.
விசாரணைகள்
எனினும் புதுடெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டு விமான இருக்கைக்கான அனுமதி(போர்டிங் பாஸ்) ஆகியவற்றுடன், அவரை நான்கு மணி நேரம் அறை ஒன்றில் அமர வைத்திருந்தனர்.
அவரது வருகையின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விசாரணை செய்த விமான நிலைய அதிகாரிகள், ஐந்து மணி நேரத்தின் பின்னரே அவரது கடவுச்சீட்டு மற்றும் போர்டிங் பாஸை சிவப்பு நிற நிராகரிப்பு முத்திரையுடன் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் நிராகரிப்புக்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை என்று ஹசன் கூறியுள்ளதாக இலங்கையின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.