விபத்தில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு
மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலன்னறுவை வைத்தியசாலையில் பணியாற்றிய 50 வயதுடைய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, பொலன்னறுவை – ஹபரணை வீதியின் 39ஆவது மைல்கல் அருகே வெள்ளிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கார், எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் இரு வாகனங்களினதும் சாரதிகள் காயமடைந்த நிலையில், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, காரைச் செலுத்திய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை புதிய நகரப் பகுதியில் வசித்து வந்த விசேட சத்திர சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிப்பர் லொறியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.