நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான விசேட அறிக்கை
சின்னம்மை நோயின் கட்டுப்பாடற்ற பரவல் மற்றும் இந்நோய்க்கு வழங்கப்படும் மருந்துகளின் பற்றாக்குறை குறித்து வெளியாகும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக, சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
தற்போது சின்னம்மை நோயின் கட்டுப்பாடற்ற பரவல் எதுவும் காணப்படவில்லை என்றும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர், சின்னம்மை நோய்க்கு எதிராக அரச வைத்தியசாலை முறைமையில் இதுவரை தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றும், அத்தகைய தேவையும் எழாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரை அரச வைத்தியசாலைகளில் இல்லாத மருந்து ஒன்றைப் பயன்படுத்தி, அதில் உடனடி பற்றாக்குறை ஏற்பட்டதாக காட்டி, நாட்டில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக இந்த ஊடக அறிக்கைகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை எனவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மக்களுக்கு தேவையான மருந்துகளை எவ்வித பற்றாக்குறையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்குத் தேவையான மருந்து இருப்புகள் ஏற்கனவே நாட்டில் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.