நாடுமுழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனைகள் ; பல இலட்சம் ரூபாய் அபராதம்
நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நாடுமுழுவதும் மொத்தம் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின்கீழ் 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனைகள்
அத்துடன், கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 362 மருந்தகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
அண்மைய சோதனைகளுடன் சேர்த்து, இவ்வருடத்தில் நடத்தப்பட்ட விசேட மருந்தக சோதனைகளின் மொத்த எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலாவதியான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, கட்டாய நுகர்வோர் தகவல்கள் இல்லாத மருந்துகள், நுகர்வோர் தகவல்களுக்கான விதிகளை மீறியமை, அத்துடன் மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.