யாழ்.மாவட்டத்தில் இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை!
யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் தேவையற்று வீதிகளில் நடமாடுவோரை அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தும் சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் முதற்கட்டமாக கொக்குவில் குளப்பிட்டி சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள ஒழுங்கையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அப்பகுதியால் சென்றோர் உட்பட சுமார் 40 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்கள் கோப்பாய் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 1ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறி தேவையற்று நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்திருந்தார்.
இந்நிலையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்.பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை இணைந்து இன்று முற்பகல் கொக்குவில் கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வீதியில் நடமாடுவோர் மீது அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.