கொழும்பு மக்களுக்கு மாநகர சபை விடுத்த விசேட அறிவிப்பு
இணையவழி ஊடாக வரி கட்டணத்தை செலுத்தும்போது கொழும்பு மாநகர சபையினால் அறவிடப்பட்டு வந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
அதனால் வரி கட்டணம் செலுத்தும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகர சபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகர சபை இடமளித்திருந்தது.
அதன் பிரகாரம் அதிகமான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது இதுவரை அதற்காக சேவை கட்டணம் கொழும்பு மாநகர சபையால் அறவிடப்பட்டு வந்தது. எனினும் தற்போது சேவைக் கட்டணத்தை அறவிடால் இருப்பதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் அறவிடப்பட்ட சேவை கட்டணம் கொழும்பு மாநகர சபையினால் செலுத்தப்படும்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையினால் வழங்கப்படும் பொதுமக்கள் நிவாரண நிதி, கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் மாளிகாவத்தை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்கள், எதிவரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகர ஆணையாளர் கோரியுள்ளார்.