விமான விபத்து தொடர்பில் விசேட விசாரணை
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் இன்று குருநாகல் பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் அது தொடர்பில் , விமானப்படைத் தளபதியால் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவால் 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழு இதற்காக நியமிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 வகை விமானம்
ஶ்ரீலங்கா விமானப்படையின் கட்டுநாயக்க முதன்மை முகாமில் உள்ள விமானப்படை இலக்கம் 05 தாக்குதல் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 வகை விமானம் ஒன்று, இன்று (21) காலை பயிற்சியின் போது வாரியபொல, பாதெனிய பகுதியில் திடீர் விபத்துக்கு உள்ளானது.
அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறி, குருநாகல் பாதெனிய மினுவன்கெடே கல்லூரி வளாகத்தில் பாராசூட் மூலம் தரையிறங்கினர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பிரதான பயிற்சி ஆலோசக விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகியோர் பயணித்திருந்த நிலையில் அவர்கள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை முகாமிலிருந்து காலை 7:27 மணியளவில் புறப்பட்டதாகவும், காலை 7:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.