நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பு குறித்து விசேட பரிசோதனைகள்
மகாவலி அதிகாரசபையின் கீழ் நிர்வகிக்கப்படும் மின்சார உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் பிரதான நீர்த்தேக்கங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விசேட பரிசோதனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபையின் தலைமைப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படும் 10 நீர்த்தேக்கங்கள் உட்பட அதிகாரசபையின் கீழிலுள்ள மொத்தம் 20 நீர்த்தேக்கங்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

முதற்கட்ட ஆய்வுகள்
இதன்படி விக்டோரியா, கொத்மலை, ரன்தெம்பே, ரந்தெனிகல, தம்புலு ஓயா, மொரகஹகந்த, பொல்கொல்ல, உடவலவ, போவதென்ன மற்றும் மாதுரு ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களில் முதற்கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பரிசோதனைகளின் போது, ஏதேனும் நீர்த்தேக்கங்கள் அனர்த்த அபாய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டால், அது குறித்து உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொத்மலை மற்றும் உமா ஓயா நீர்த்தேக்கங்கள் தொடர்பில் கடந்த காலத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விசேட அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.