குவைத் நோக்கி சென்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-229 என்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக குறித்த விமானம் புறப்பட்டு 2 மணித்தியாலங்கள் 21 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே திருப்பி அழைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று (08) மாலை 06.44 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கிப் புறப்பட்டது.
எனினும், விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானி இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதற்கமைய செயற்பட்ட விமானி, இரவு 09.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
சம்பவத்தின் போது விமானத்தில் 179 பயணிகளும் 08 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றிப் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளனர்.
இது தொடர்பில் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் கூட்டமைப்புத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, பாதிக்கப்பட்ட பயணிகளை மாற்று விமானங்கள் ஊடாக குவைத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.