ரமழான் மாத விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையை அமைச்சு அனுப்பியுள்ளது.
ரமழான் மாதம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முடிவடைய உள்ளதால் இந்த காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
தொழுகைகளும் மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.ப. 03.30 முதல் மு.ப. 06.00 வரை
பி.ப 03.15 முதல் பி.ப 04.15 வரை
பி.ப 06.00 முதல் பி.ப 07.00 வரை
பி.ப 07.30 முதல் பி.ப 10.30 வரை
இக்காலத்தின் போது அந்த உத்தயோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும்.
மேலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம்.
மேலும் ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.