உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றம் குறித்து விசேட கலந்துரையாடல்
தற்போது நிலவும் அதிக மழை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்து இன்று (27) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்னவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
கல்விச் செயலாளர் நாலக்க களுவெவ, இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே உள்ளிட்ட பரீட்சைத் திணைக்களம் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, நடப்பு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
மாகாண மற்றும் வலய மட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்றும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து ஆதரவு நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த ஒழுங்கமைவுடன் இந்த செயல்முறையை முன்னெடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர், கல்வி அமைச்சு, இலங்கை பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவற்றின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எந்தவிதமான அநாவசிய பயத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்விச் செயலாளர் நாலக்க களுவெவ, நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும் (27) நாளையும் (28) மூடப்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

பாடசாலைத் தவணையின் எஞ்சிய பகுதி தொடங்கும் திகதி ஊடகங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மூடுவது தொடர்பான அதிகாரம் அந்தந்த துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, பரீட்சை ஆணையாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கையில், நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்களுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், வானிலை சீராக இருந்தால், பரீட்சை திங்கட்கிழமை (டிசம்பர் 01) அசல் அட்டவணையின்படியே நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பரீட்சைத் திணைக்களத்தின் நிறுவனப் பரீட்சைகள் பிரிவினால் நவம்பர் 29ஆம் திகதி நடத்தப்படவிருந்த பதிவாளர் நாயகம் திணைக்கள சேவையில் I ஆம் வகுப்பின் III ஆம் தரத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், நவம்பர் 30ஆம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழில்நுட்பம் சாராத பிரிவின் III ஆம் தரத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.