ரயில் பயணச்சீட்டு பயணிகளுக்காக இன்று முதல் சிறப்பு பஸ் சேவை
ரயில் பயணச்சீட்டை வைத்திருக்கும் பயணிகளுக்காக இன்று (08) முதல் சிறப்பு பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் குருணாகலில் இருந்து சேவையில் இயங்கும் பஸ்ஸின் பயணிகள் தங்கள் ரயில் பயணச்சீட்டுகளை பயன்படுத்தி பஸ்ஸில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிராண்டா தெரிவித்தார்.

அதி சொகுசு சேவைகளைத் தவிர்த்து பயணிக்க அனுமதி
அதன்படி, கண்டி மற்றும் குருணாகலில் இருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு பஸ் சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன இன்று (08) மாலை 4.15 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் குருணாகல் பகுதிகளுக்கு மூன்று பஸ்கள் இயக்கப்படும்.
கூடுதலாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ரயில் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சிறப்பு பஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை அதி சொகுசு சேவைகளைத் தவிர்த்து, மாதாந்த ரயில் பயணச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.