சித்திரைப் புத்தாண்டுக்காக ஊர் திரும்பும் மக்களுக்கு விசேட அறிவித்தல்
தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் மற்றும் மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையம் ஆகியவற்றில் மக்கள் பெருமளவில் திரண்டிருந்ததைக் காணமுடிந்தது.
கிராமங்களுக்குச் செல்வதற்காகப் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள், தமது பயணத் தேவைகளுக்கேற்ப போதியளவு பேருந்து வசதிகள் இல்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும், பயணிகளின் தேவை கருதி இன்றைய தினமும் மேலதிகபேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்தோட பயணிகளிடம் அதிக பேருந்து கட்டணங்களை வசூலிக்கும் நபர்கள் குறித்து தகவல் வழங்க முடியும் எனவும், அவ்வாறு சட்டவிரோத கட்டணங்களை அறவிடும் தரப்பினருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பண்டிகைக் காலத்தையொட்டி விசேட தொடருந்து சேவைகள் இன்றும் அமுலில் இருக்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக தொடருந்து மார்க்கத்தை தவிர, ஏனைய அனைத்துப் பாதைகளிலும் இந்தப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.