பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகள்: ஜீவன் மீது எழுந்த குற்றச்சாட்டு
ஹட்டனில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவிற்கு பிரபல தென்னிந்திய நடிகைகளை அழைத்தமை தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சங்கீதா மேனன் மற்றும் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருவதற்கு வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்பட்டதா என அமைச்சர் ஜீவன் அரசியல் எதிரிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் லெட்சுமணர் சஞ்சய்,
“வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் போது, ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய தைப் பொங்கலைக் கொண்டாடினார் என்று ஜீவன் தொண்டமானிடம் வினவினார்”
“நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகுகள் அதிகரித்துள்ளன. பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன.
மக்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்கி அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களின் சேவைகளை பெற்றுக் கொண்டனர். ஆனால் ஜீவன் தொண்டமான் தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருகிறார்.
இந்தப் பயணத்துக்கான பணம் எங்கிருந்து கிடைத்தது? இவ்வாறு மக்களின் பணத்தை வீணடித்ததற்கு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் ஜீவன் தொண்டமான் பதில் சொல்ல வேண்டும்” என லெட்சுமணர் சஞ்சய் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்விற்கு தென்னிந்திய நடிகைகளுக்கு பதிலாக உள்ளூர் கலைஞர்களை அழைக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.