விரைவில் முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் புதிய கூட்டணி?
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகள் புதிய கூட்டணியொன்று குறித்து ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அக் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட )கட்சிகளும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனவிரக்தியில் காணப்படுவதுடன், முக்கிய அரச கட்சி தங்களை புறக்கணிக்கின்றதாக அவர்கள் கருதுகின்றதாகவும் புதிய கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள உயர்வட்டாரங்கள்தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் இரண்டாம் தர பிரஜைகளாக உணர்கின்றோம், நாங்கள் புதிய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றோம் நிச்சயம் அது இடம்பெறும் என அரச பங்காளிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த புதிய கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக்கட்சியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிசந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து கலந்துரையாடி முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் இது இடம்பெற்றதாகவும் தெரிவித்த அவர், தற்போது முக்கிய கட்சி மாத்திரமே சந்திப்புகளை மேற்கொள்கின்றது,நாங்கள் இரண்டாம்தர பிரஜைகள் போல நடத்தப்படுகின்றோம்,எவரும் மகிழ்ச்சியாகயில்லை எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அமைச்சர்களை கலந்தாலோசிக்காமல் தீர்மானங்களை எடுப்பதனால் தங்கள் பதவி பறிபோகலாம் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்தவர்கள் விசனம் வெளியிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.