அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் தொழிற்சங்கப் போராட்டங்கள்
2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது துறைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனப் பல தொழிற்சங்கங்கள் மற்றும் தரப்பினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுதினம் (நவம்பர் 23) 'தேசிய எதிர்ப்பு தினமாக' பிரகடனப்படுத்த தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.
இந்தத் தேசிய எதிர்ப்பு தினப் போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலான இரண்டு மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள தமது அனைத்து கிளைச் சங்கங்களிலும் அவசரக் கூட்டங்களைக் கூட்டியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் உபயபண்டார வரக்காகொட, குறித்த இரண்டு மணித்தியால நேரப்பகுதியில் அவசர சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2027 வரவு செலவுத் திட்டத்தில் தமது பயணச் செலவுகள் மற்றும் அலுவலகக் கொடுப்பனவுகள் போதுமான அளவு அதிகரிக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தி, நாளை மறுதினம் முதல் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் அனைத்துக் கடமைகளிலிருந்தும் விலகிக்கொள்ள சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.