அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்வு ; அறுகம்பை சபாத் இல்லம் மூடல்
அம்பாறை பொத்துவில் – அறுகம்பை பகுதியில் இயங்கி வந்ததாக கூறப்பட்ட இஸ்ரேலியர்களின் சபாத் இல்லம் இன்று (10) உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.
பொத்துவிலைச் சேர்ந்த தமீம் என்பவர் சுற்றுலா ஹோட்டல் நோக்கில் விற்பனை செய்த காணி, பின்னர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் பெற்றுக்கொள்ளப்பட்டு ஹோட்டல் மற்றும் உணவகம் எனும் பெயரில் இயக்கப்பட்டு வந்ததாகவும், அத்துடன் இஸ்ரேலியர்கள் ஒன்று கூடும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த இடத்தில் இஸ்ரேலியர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டிடம் சபாத் இல்லம் என அழைக்கப்பட்டு அண்மைக் காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சர்வதேச ரீதியிலும் கவனம் பெற்றதுடன், அரசியல் வட்டாரங்களில் சூடு பிடித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதோடு, நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சநிலையும் உருவாகியிருந்தது. காணியை வழங்கிய தமீம் என்பவரும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையைத் தொடர்ந்து, தமீம் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால், குறித்த காணி அதி கூடிய விலைக்கு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இன்று அந்த இடத்தில் காணி உரிமையாளர் தமீம் தலைமையில் பால் சோறு வழங்கப்பட்டதுடன், பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் M.S.M. அப்துல் வாசித், சட்டத்தரணி சாதீர், பிரதேச சபை தவிசாளர் S.M.M. சமுசாரப், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அப்துல் மஜீத், தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம், பிரஜா சக்தி உறுப்பினர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சபாத் இல்லமாக இயங்கியதாக கூறப்பட்ட இடங்களில், முதற்தடவையாக தனிப்பட்ட முயற்சியில் மீளப் பெற்ற இடம் இதுவே எனக் குறிப்பிடப்படுவதுடன், அரசியலுக்கு அப்பாற்பட்டு இரவு பகலாக முயற்சி செய்து தனது காணியை மீளப் பெற்ற தமீம் என்பவருக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“இந்த இடத்தை வழங்கியதனால் நான் எதிர்கொண்ட கஷ்டங்களும் விமர்சனங்களும் ஏராளம். இனிமேல் யாரும் இவ்வாறு இடங்களை விற்பனைக்கோ அல்லது வாடகைக்கோ வழங்க வேண்டாம்” என காணி உரிமையாளர் தமீம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தும் தீர்வு காண முடியாத ஒரு விடயம், ஒரு தனி நபரின் உறுதியான முயற்சியால் நிறைவேறியுள்ளதாக சமூகத்தின் பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.