சாலமன் பாப்பையா மறைவு; ஈடுசெய்ய முடியாத இழப்பு ; இலங்கை அரசியல்வாதி இரங்கல்
தமிழின் சிறப்பையும், நகைச்சுவையின் நயத்தையும் பட்டிமன்றங்கள் ஊடாக உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற தமிழறிஞரும் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையா தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் தமிழ் மீதான ஆழ்ந்த பற்றின் மூலம் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு
அவரது மறைவு தமிழ் இலக்கியத்துக்கும் பட்டிமன்ற உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழை எளிமையாகவும் சுவையாகவும் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும் .
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.