காணிக்கு பதில் பிஸ்கட் மற்றும் குளிர்பானமா; யாழில் மக்கள் ஆவேசம்!(Photos)
யாழ்ப்பாணம் மண்டைதீவில் தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு , பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்கிய கடற்படையினரிடம் அவற்றை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
கடற்படை முகாமுக்காக 29 பேருக்கு சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு காணி அளவீடு செய்ய நில அளவை திணைக்களம் இன்றைய தினம் புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது.
எதிர்ப்பு போராட்டத்தால் திரும்பிய அதிகாரிகள்
இதன் போது , குறித்த கடற்படை முகாமிற்கு முன்பாக காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை முன்னெடுக்காது , திரும்பி சென்றனர்.
அதனை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்த போது , தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கடற்படையினர் வழங்கினார்.
அதற்கு மக்கள், " எங்கள் காணிகளை சுவீகரித்துக்கொண்டு எமக்கு பிஸ்கட் தருகிறீர்களா ? என கேள்வி எழுப்பி இருந்தனர். அத்துடன் எங்கள் காணிகளை எங்களிடம் கையளித்து விட்டு ,செல்லுங்கள். எங்களுக்கு பிஸ்கட் தந்து எங்கள் காணிகளை பறிக்காதீர்கள் எ கூறி அவற்றை வாங்க மறுத்து சென்றனர்.