இலங்கை அகதிகளை மீண்டும் அனுப்பும் நடவடிக்கையில் ஐ.நா. புதிய தடை
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள் அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் அகதி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார்.
ஓகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் அகதிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.