இலங்கையில் தங்கியிருக்கும் அந்த 'சர்ச்சைக்குரிய' நபர் ; சர்வதேச அமைப்பு இலங்கைக்கு வைத்துள்ள கோரிக்கை
காசா பகுதியில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை அழித்ததாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில், இஸ்ரேலிய-அமெரிக்க வீரரான ஜேக் பர்கோன்ஸ் (Jake Burkons) என்பவருக்கு எதிராக ஹிந்த் ராசாப் அறக்கட்டளை THE HIND RAJAB FOUNDATION - THRF) இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளது.
இந்த தகவலை – THRF அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா (டெக்சாஸ்) ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை கொண்ட ஜேக் பர்கோன்ஸ், இஸ்ரேலிய இராணுவத்தின் 7ஆவது கவசப் படையின் 603ஆவது போர் பொறியியல் பட்டாலியனில் தன்னார்வலராகப் பணியாற்றியவர்.

காஸாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்பு கட்டடங்களைத் தகர்ப்பதில் அவர் நேரடியாக ஈடுபட்டதற்கான புகைப்பட மற்றும் காணொளி ஆதாரங்கள் அவரது சமூக வலைதளங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக THRF தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஒரு சிவிலியன் கட்டடத்தைத் தகர்ப்பதற்கான வெடிபொருள் கம்பியை அவர் வைத்திருக்கும் காட்சி இதில் அடங்குவதாக குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பர்கோன்ஸ் அங்கம் வகித்த 603ஆவது கட்டளைப்பிரிவு, காஸாவில் மசூதிகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை தகர்த்து அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது ஜேக் பர்கோன்ஸ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கையில் தங்கியிருப்பதை ஹிந்த் ராசாப் அறக்கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, தனது எல்லைக்குள் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் இருப்பதாகக் கருதப்பட்டால் அவர்களை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அந்த நாட்டுக்கு உண்டு என்பதை THRF சுட்டிக்காட்டியுள்ளது.
"போர்க்குற்றவாளிகள் ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த அரசுக்கு உள்ளது" என வலியுறுத்தியுள்ள THRF பர்கோன்ஸை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.