யாழ் நல்லூர் ஆலய சூழலில் ஊதுபத்தி விற்றவர்களுக்கு விளக்கமறியல்! கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள் மீட்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் ஊதுபத்தி விற்றவர்களை விளக்கமறியலில் யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நல்லூர் ஆலய சூழல் உட்பட யாழ்ப்பாண நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்திற்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து புதன்கிழமை இரவு யாழ்ப்பாண பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர். அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவர்களை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.