சமூக வலைத்தளத்தில் அறிமுகமான யுவதி ; கைப்பிடிக்க வந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!
இத்தாலியிலிருந்து வந்த 71 வயது முதியவர்; காலியைச் சேர்ந்த மருத்துவ மாணவி 'திக்ஷானி பிரமோத்யா'வைத் தேடி அலைந்த அவலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த எழுபத்தியொரு வயதுடைய திருமணமான நபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் அறிமுகமான காதலியை கரம்பிடிக்க புதிய நம்பிக்கைகளுடன் கடந்த 25-ஆம் தேதி இலங்கை வந்தடைந்தார்.

இத்தாலியில் இருந்து பரிசு பொருட்கள்
அவர் இலங்கைக்கு வந்த தருணத்திலிருந்தே, அந்தப் பெண்ணின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்காத நிலையில், வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த அந்த நபர், பல மாதங்களாக அவரிடம் காதலியைப் போல உரையாடி, பணத்தைப் பெற்று வந்தவர், அலைபேசிக் கடை ஒன்றில் பணிபுரியும் இருபத்தியொரு வயது இளைஞர் என்பதை அறிந்து அதிச்சியடைத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மென்பொருள்களைப் பயன்படுத்தி இத்தாலி நபரிடம் திட்டமிட்ட பண மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாக 'திக்ஷானி பிரமோத்யா' (Thikshani Pramodya) என்ற பெயரில் மருத்துவ மாணவி போல ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி தான் வறுமையில் வாடுவதாக இத்தாலி நபரின் அனுதாபத்தைப் பெற்றார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவ மாணவி சீருடை அணிந்த புகைப்படங்களையும், சாதாரண புகைப்படங்களையும் அவர் அனுப்பினார்.
இளைஞன் செய்த ஏமாற்று வேலை
மேலும், ஒரு பெண்ணின் குரலில் அவரிடம் உரையாடுவதற்காக, பிரத்யேக மென்பொருள் ஒன்றையும் அந்த இளைஞர் பயன்படுத்தினார்.
இத்தகைய உரையாடல்களாலும், செயற்கையாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களாலும் ஏமாற்றமடைந்த அந்த நபர், மொத்தம் பதினெட்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அனுப்பி வைத்தார்.
இதுமட்டுமின்றி, காதலிக்காக இரண்டு முறை பல்வேறு பரிசு பொருட்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்த மோசடி குறித்து காலி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை மையமாகக் கொண்டு விரிவான விசாரணையைத் தொடங்கினர்.
இதில், அந்த இளைஞர் ஆரம்பத்தில் மூன்று வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியதும், பின்னர் தான் பணிபுரிந்த அலைபேசிக் கடையின் உரிமையாளருடன் இணைந்து ஒரு கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்கி, மோசடி செய்த பணத்தை அந்த கணக்கிற்கும் மாற்றியதும் கண்டறியப்பட்டது.

பொலிசார் இரு சந்தேக நபர்களையும் கைது செய்து கடந்த 28ஆம் திகதி காலி நீதவான் சமீர டொடங்கொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, பெண் ஒருவரைப் போல வேடமிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும், இளைஞனை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட, கைபேசிக் கடையின் உரிமையாளரை, தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரு தனிநபர் பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.