சாங்கிரிலா காணி விற்பனை; சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதி!
கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள 'சாங்கிரிலா' மற்றும் ஒன் கோல்பேஸ் காணிகளை விற்பனையில் இடம்பெற்ற மில்லியன் கணக்கான ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் உட்பட அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி 'இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அமைப்பு ' நேற்று (29) இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முதலீட்டாளர் ஒருவருக்குக் காணிகளை விற்பனை செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையை மீறி, இந்தக் காணி விற்பனையை 3 நாட்களுக்குள் மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதி
இவ்வாறான கொடுக்கல் வாங்கலின்போது அமைச்சரவையின் அனுமதி பெறுதல், மதிப்பீட்டு அளவை பெறுதல், பகிரங்க ஏலம் விடுதல் அல்லது விலை மனுக்களைக் கோருதல் என்பன மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணங்களை ஆராயும்போது அரச காணி கட்டளைச் சட்டத்தின் (அதிகாரம் 454) 253 (2) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து தனக்குச் சாதகமான தரப்பினருக்கு இக்காணிகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இக்காணிகளை மீண்டும் அரசுக்கு உடமையாக்கி இந்த ஊழல் மிக்க பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஊழலுக்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷார இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.