அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; வீடுகளுக்குள் வெள்ளம்!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதால், லிந்துலை பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகப் தெரிவிகப்படுகின்றது.
நேற்று 20ஆம் திகதி பிற்பகல் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொத்மலை நீர்த்தேக்கத்தில் கலக்கும் ஆக்ரா ஓயா ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி மற்றும் ரயில் பாதை
வான் கதவுகள் திறக்கப்பட்டதால் , லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா, தங்கக்கலை தோட்டப் பகுதியில் ஆக்ரா ஓயா ஆற்றுக்கு அருகிலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த கனமழையால் அம்பேவெல ரயில் நிலையம், நுவரெலியா–அம்பேவெல–பட்டிப்பொல பிரதான வீதி மற்றும் ரயில் பாதை ஆகியனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக குறித்த வீதியில் சுமார் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து தடைப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி அசேந்திர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.