வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள்
நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 791 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் SLBFE தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இரண்டு மற்றும் உரிமம் பெறாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட சுமார் 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட விசேட பொலிஸ் பிரிவு ஒன்று கடந்த ஆண்டு பணியகத்திற்குள் நிறுவப்பட்டது.
எனினும் சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அது தொடர்பில் உறுதிப்படுத்துமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.