நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் முயற்சி ; கேள்வியெழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் சீர்குலைக்கும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

முன்மொழிவு
மேல் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதனை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி, இந்த முன்மொழிவுக்கான எந்தவொரு விளக்கத்தையும் அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இந்த தெளிவற்ற தன்மை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பை வரைந்து அதனை பொதுஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதாக அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிராக முன்னர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முரணாக ஆளும் கூட்டணி தற்போது செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தகுதியுடைய ஏனைய நீதிபதிகளின் பதவி உயர்வுகளை அநியாயமாக தாமதப்படுத்தும் என்றும், மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கக் கோரும் அரசியலமைப்பின் 28ஆவது பிரிவை மீறுவதாகவும் அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முன்மொழிவானது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என்றும் அக்கட்சி வாதிட்டுள்ளது.
நீதித்துறையைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த முயற்சிக்கு எதிராக தலையிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள அக்கட்சி, இந்த முன்மொழிவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.