பதுளை பசறையில் இடம்பெற்ற விபத்துக்கு காரணமான அந்த ஆறு தரப்பினர்?
பதுளை பசறையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தின் காணொளி பார்த்தேன். யாரைச் சொல்லி யாரை நோவது? நெஞ்சு பதறுகின்றது என சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.
ஒடுங்கிய அந்த பாதையில் சற்று நேரம் நின்று ஒருவருக்கொருவர் வழிவிட்டு நிதானமாக செல்வதற்கு இரண்டு சாரதிகளுக்குமே மனம் இடம் தரவில்லை.
பொறுப்புவாய்ந்த பலர் செய்த பிழையால் 15 உயிர்கள் அநியாயமாக மாண்டுபோயுள்ளன. மிக ஆபத்தான அந்த இடத்தில் எச்சரிக்கை செய்யக்கூடிய எந்தவொரு குறியீடும் இருப்பதாக தெரியவில்லை.
அழிந்து போயுள்ள வீதியின் நடுக்கோட்டைக்கூட மீள் வரைதல் செய்யவில்லை. இந்த மானுடப் பலிகளுக்கு இலங்கையின் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் ஒரு காரணமாகிவிட்டது.
எத்தனையோ சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தும் பார ஊர்திகளை பகலில் செல்வதற்கு அனுமதியளித்துள்ள நாட்டு சிஷ்டமும் ஒரு காரணமாகிவிட்டது.
தெரிந்துகொண்டே வீதியில் தவறிழைக்கும் பாரவூர்தி ஓட்டுநர்களிடம் ஐந்தை பத்தை பெற்று அனுப்பிவைத்து பல்லிழித்து நிற்கும் காவல்துறை சிஷ்டமும் ஒரு காரணமாகிவிட்டது.
அந்த வீதியில் தனக்குரிய பக்கம் அதுவல்ல என தெரிந்தும் அடுத்தவன் பக்கத்துக்குச் சென்ற அந்த டிப்பர் ஓட்டுநர் கணப்பொழுதில் நிகழ்ந்த அந்த பேரவலத்திற்கு காரணமாகிவிட்டான்.
தான் செலுத்திவந்த பேருந்தை, ஆபத்தான அந்த வளைவில் முன்னுக்கு ஒருவன் தான்தோன்றித்தனமாக வருகிறான் என்பதை தெரிந்தும் பொறுமை துளியளவுமின்றி ஏட்டிக்குப்போட்டியாக ஓட்ட முயன்று மக்களோடு அந்த மாபெரும் ஊர்தியைப் புரட்டிய ஓட்டுநரும் ஒரு காரணமாகிவிட்டான்.
இதுபோன்ற தவறுகள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதிஷ்டவசமாக பல வேளைகளில் இந்த பேரவலங்கள் நிகழ்வதில்லை.
ஆனால் அவ்வாறு கண்மூடித்தனமாக ஓட்டும் சாரதிகளை, பேருந்தினுள் சிவில் உடையில் பயணம் செய்யும் பொலிஸாரோ இராணுவமோ மற்றும் பொறுப்புவாய்ந்த பொதுமகனோ தட்டிக்கேட்கத் துணிவதில்லை.
யாரைக் குற்றம் சொல்லி என்னதான் நடக்கப்போகிறது? இரண்டொரு நாளில் எல்லாவற்றையும் மறந்து பழைய பல்லவியைத்தானே எல்லாரும் பாடப்போகிறோம். மீண்டும் இந்த தவறுகள் நிகழாமல் இருக்கப்போவதுமில்லை.மாண்டவர்கள் மாண்டவர்கள்தான்.
ஆனால் அவர்களையே நம்பியிருந்த அவர்களின் குடும்பம் காலம்முழுக்க படுகின்ற வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் இவர்கள் கொடுக்கின்ற இழப்பீடு எந்த அளவுக்கு போதும்?