இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரலாம்; எச்சரிக்கும் முக்கியஸ்தர்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். அங்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்,
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படலாம். மத்திய அரசு தொடர்ந்து தவறான பொருளாதார கொள்கைகளை கொண்டு இருந்தால் இந்தியாவும் பொருளாதார நெருக்கடி சந்திக்கும் அபாயம் உள்ளது.
ஏனெனில் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் தவறான கொள்கைகளே காரணம் என சுட்டிக்காட்டினார். பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாமல் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் இதற்கு காரணம் என தெரிவித்த அவர், அந்த தவறான பொருளாதார கொள்கையின் அடையாளங்கள் இந்தியாவிலும் தெரிகிறது.
மத்திய பாஜக அரசின் கொள்கைகளிலும் அதற்கான சாயல்கள் தெரிகின்றதாகவும் கூறினார். இலங்கையில் வேகமாக உயர்ந்த விளைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் அவர்கள் பொருளாதார சரிவை சரி செய்ய கடன் வாங்கி, மேலும் சரிவை சந்தித்து மேலும் கடன் வாங்கி உள்ளனர். அங்கு சில்லறை பணவீக்கம் இன்று 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவிலும் எக்கச்சக்க கடன் வாங்கி எதற்கு செலவு செய்கிறார்கள் என்றே தெரியாமல் செலவு செய்கிறார்கள். இந்தியாவும் தவறான கொள்கைகளை பின்பற்றினால் இலங்கையில் ஏற்பட்ட நிலைதான் இங்கும் ஏற்படும் எனவும் எச்சரித்தார்.
 
எனவே முறையாக திட்டமிடப்பட்ட பொருளாதார கொள்கை இந்தியாவிற்கு தேவை என கூறிய அவர்,  இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் - ஒரே உணவு என பிரச்சாரம் செய்கிறார்களா என கேள்வி எழுப்பிய அவர்,  நாம் இருப்பது என்ன சமதர்ம நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும்  ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        