சவேந்திர சில்வாவிற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.
தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை
உள்நாட்டு போரில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் குறித்த பிரிவிடம் இந்த ஆவணங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ளது .
இந்த ஆவணம் 2020 ஜூலை ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தடை நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் ஏன் சவேந்திரசில்வாவை தடை செய்யலாம் என தெரிவிக்கின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலங்களில் சவேந்திரசில்வா 58 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றி இருந்தார்.
அந்தவேளை உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட மீறப்பட்டமை உட்பட இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்பு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆவணம் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.